×

விளாத்திகுளம் வட்டாரத்தில் திமுக வேட்பாளர் வசந்தம் ஜெயக்குமார் கிராமம் கிராமமாக வாக்கு சேகரிப்பு

விளாத்திகுளம், ஏப். 9:  விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வசந்தம் ஜெயக்குமார், விளாத்திகுளம் அடுத்த மகாராஜபுரம், ஜமீன் கோடங்கிபட்டி, குருவார்பட்டி, கருத்தையாபட்டி, குமாரபுரம், ஆற்றங்கரை, ஓ.துரைச்சாமிபுரம், சொக்கலிங்கபுரம், கந்தசாமிபுரம், கரிசல்குளம், அயன் பொம்மையாபுரம், பிள்ளையார்நத்தம், வில்வமரத்துபட்டி, வெள்ளையம்மாள்புரம், அருங்குளம் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட கிராமங்களில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வாக்குசேகரித்தார். அப்போது அவர் பேசுகையில்,‘‘திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில்தான் ஏழை மக்கள் பயன்பெறும் வகையில் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் கொண்டுவரப்பட்டது. இதே போல் பெரியார் நினைவு சமத்துவபுரம் என பிறந்த குழந்தை முதல் முதியவர் வரை அனைத்துத்தரப்பு மக்கள் பெறும்வகையில் ஏராளமான திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.

 இதனிடையே 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களுக்கு வங்கிகள் மூலம் முறையாக ஊதியம் வரவுவைக்கப்படாததால் ஏராளமான முதியோர்கள் சிரமப்படுகின்றனர். இதே போல் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டி வரிவிதிப்பு, நீட் தேர்வு போன்ற மத்திய அரசின் நடவடிக்கைகளால் மக்கள் அவதிப்படுகின்றனர். மத்திய பாஜ அரசின் பினாமியாக மக்களுக்கு எதிரான திட்டங்களை கொண்டு வரும் அரசாக அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. இந்த இரு ஆட்சிகளையும் வீட்டுக்கு அனுப்பவேண்டும்.
 திமுக ஆட்சிக்கு வந்ததும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டம் 200 நாட்களாக மாற்றப்படும். வேளாண், கல்விக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இதுபோன்று திமுக தேர்தல் அறிக்கையில் அனைத்தையும் செய்துதர உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் என்னை வெற்றிபெறச் செய்யுங்கள்’’ என்றார்.  பிரசாரத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் அன்புராஜன், புதுராஜா,  இளைஞர் அணி  மாவட்ட துணை அமைப்பாளர் இமானுவேல், பொறியாளர் அணி அமைப்பாளர்கள் சென்ராயப்பெருமாள், மதிமுக ஒன்றியச் செயலாளர்கள் குறிஞ்சி, மணிராஜ், திமுக இளைஞர் அணி ஆனந்த், திமுக முன்னாள் ஒன்றியச் செயலாளர் வேலாயுதப்பெருமாள் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Tags : Vasantham Jayakumar ,area ,Vellithikulam ,village village ,DMK ,
× RELATED அருமனை அருகே மின்கசிவு ஏற்பட்டு வீடு தீப்பிடித்து எரிந்தது